Hello world!

Gowthamanpasu's Blog

Welcome to WordPress.com. This is your first post. Edit or delete it and start blogging!

View original post

சுனாமியின் நினைவாக……

ஆழிப்பேரலை

தமிழினமே, நீ

சொந்த நாட்டிலேயே

அகதியாய் வாழ

இன்னும் எத்தனை முறை

சபிக்கப்படுவாய் ?

ஆக்கிரமிப்பால்,அரசியலால்

பண்பாட்டால்,படையெடுப்பால்

காவியால்,கல்வியால்

மொழியால்,வாழும் நிலையால்

இதோ உன் உறவுகள்

ஈழத்தில்,

இப்போது  தண்ணீரால்!

டிசம்பர் 26

புத்தாண்டை நோக்கிய

புன்னகை முகங்களில்

அதிர்ச்சியும்,அலங்கோலங்களும்!

அது என்ன

கடல் நடத்திய கதகளியா?

இல்லை,

ஆழிப்பேரலையின்

ஊழித்தாண்டவம்!

நீரின்றி அமையாது உலகு

நீரே ஊரானால்…?

கரையெல்லாம் தண்ணீர்

தரையானால்…..?

என்

ஆதித்தமிழனை அழித்த

ஆழிப்பேரலையை,

காவிரிப்பூம்பட்டிணத்தின்

கடல்கோளினை

புத்தகத்தில் படித்ததுண்டு,

பக்கத்தில் பார்த்த்தில்லை !

இதோ, இன்று

அக்கரைப்பேட்டை அழிந்த

அதிர்ச்சியிலிருந்து

மீளவில்லை இன்னும்….

கட்டிடங்களை-கார்களை,

கரையோரக் குப்பங்களை,

கடவுளிருந்த கோயில்களை,

பாலங்களை-படகுகளை,

ஓடி விளையாடிய சிறுசுகளை,

உற்சாக நடைபோட்ட பெருசுகளை

உல்லாச நடைபோட்ட காதல்களை

எல்லோரையும்,எல்லாவற்றையும்

தொட்டு இழுத்து சுவைத்துப்

பின் துப்பிச்சென்றாயே

கடலே,

உனக்கு என்ன

அவ்வளவு பெரிய குடலா?

கடலலை தாலாட்டிய

வேளாங்கண்ணியின்

கரையெது?கடலெது

அடையாளம் தவறிய அவலம்!

மாதாகோயிலே

மார்ச்சுவரியாகிப்போன துயரம்!

தோண்டிப் புதைக்கபடுவதற்குப் பதிலாக

தோண்டித் தோண்டி எடுக்கப்பட்ட

மரணங்களும்,மனிதர்களும்!

ஊரை அழித்து

உறவைத் தொலைத்து

தெருவையெல்லாம்

தண்ணீர்த் தடங்களாக்கி

வீடுகளையெல்லாம்

வெறுந்திடலாக்கிய கடலே,

உனக்குள்

உப்பிருந்தது தெரியும்,

முத்திருந்தது தெரியும்,

சத்துள்ள மீனிருந்தது தெரியும்,

இன்னும் ஏராளம்,ஏராளம்

இயற்கை வளமிருப்பதும் தெரியும்

ஆனால் கடலே, உனக்குள்

சுனாமி என்றொரு

சுடுகாடிருந்தது மட்டும்

தெரியவில்லை?

ஆனாலும்,

ஊழித்தாண்டவமாடிய இந்த

ஆழிப்பேரலைகள்

சொன்ன செய்திகள்

ஏராளம், ஏராளம்!

இயற்கையை வெல்வோம் என்று

ஓசானில் ஓட்டை போட்ட மனிதனின்

செயற்கைத் திமிர் சிதைந்து போயிற்று!

இயற்கையோடியைந்த வாழ்க்கையை

இயந்திரத்தோடு இணைத்த

மனிதனின் விஞ்ஞானம்

முறித்து கீழே கிடக்கிறது!

பொங்கிய கடலில்

எங்கும்,எங்கும்

மனிதர்கள் மரணித்தாலும்

மனிதம் தழைத்தது!

ஆம், இது ஒன்றும்

அயோத்தியைப் போல,

கோத்ராவைப் போல,

பெஸ்ட்பேக்கரியைப் போல

மதங்கள் நட்த்திய கொலையல்ல!

இயற்கையின் சீற்றத்திற்கு

மனிதஇனம் கொடுத்த விலை!

எனவே தான்,

ஹிரோசிமா, நாகசாஹி,

வியத்னாம், எத்தியோப்பியா,

பாலஸ்தீனம், போபால்,

ஈழம்,

குஜராத், குடந்தை

இப்போது

சுமத்ரா தொடங்கி சோமாலியா வரை

மனிதர்கள் எங்கு

கொத்துக் கொத்தாய்

செத்தாலும் அங்கே

நேயம் முளைக்கிறது!

மதம் கடந்து – சாதி கடந்து

மொழி கடந்து – வழி கடந்து

மனிதம் தழைக்கிறது,

மனிதம் செழிக்கிறது,

மனிதத்திற்கு மரனமில்லை!

இது,

பேரலை சொன்ன

நேரலை செய்தி!

நமக்கு ஒன்றும்

சுனாமி புதிதல்ல,

பஃறுளியாறும்,லெமூரியாவும்

பண்டைய சுனாமி அழித்த

உச்சத் தமிழனின்

மிச்சங்கள் தாம்  நாம்!

எனவே,

சோகங்கள் துடைத்தெறிவோம்!

நிவாரணம் என்பது நிரந்தரமில்லை

தங்கிச் செல்ல ஒரு கூடாரம்!

தடவிச் சொல்லும் ஒரு ஆறுதல்!

எழுந்து நின்று தடம்

எடுத்து வைக்க ஒரு ஊண்றுகோல்!

எனவே,

எழுந்து நிற்போம்,

விரைந்து நடப்போம்!

இயற்கையை இயற்கையாய்

இருக்க விடுவோம்!

இயற்கையோடு இயற்கையாய்

இருக்கப் பழகுவோம்!

கரை நெடுக

காடுகள் செய்வோம்!

அலை மீறாமல்

அலையாத்தி வலை விரிப்போம்!

வாருங்கள்,

இந்த சோக இருளிலிருந்தே

புதிய சூரியனை நிர்மனிப்போம்!

[16.01.2005ல் தமிழ்க் கவிஞர் பெருமன்றம் நடத்திய கவியரங்கில்…..]

——————————————-

பெரியாரைப் போற்றுவோம்……!

வண்ணங்கள் தூரிகையினால்

வரைபடமாவது போல் என்

எண்ணங்கள் எழுத்துக்களின்

ஊர்வலமாய்

உங்கள் காதுகளை நோக்கி…..,

வணக்கம்!

நீண்ட இடைவெளிக்குப்பின்

வாய்மைக்கு அருகில்

ஆம்,

என் வாய் மைக்குக்கு அருகில்!

பெரியாரைப் போற்றுவோம்,

ஆனால் அதற்கு முன்

கொஞ்சம் யோசிப்போம் !

எதை எழுதி… என்ன எழுதி

ஏனெனில் இங்கே

பெரியாருக்குப் பிறகு

33 ஆண்டுகளாய்

போட்டது போட்டபடி

வைத்தது வைத்த இடத்தில்!

இதில் எதை எழுதி,

எதைச் சொல்லி………

பெரியர் உடைபடுகிறார்,

பெரியார் உருவம் மாற்றபடுகிறார்,

பெரியர் ஏசப்படுகிறார்,

ஆனாலும்,

பெரியார் பேசப்படுகின்றார்!

எனவே

பெரியாரைப் போற்றுவோம்

அதற்கு முன் கொஞ்சம் பேசுவோம்!

முகங்களைத் தொலைத்து விட்டோம்

முகவரிகளைத் தேடுகின்றோம்!

பாதைகளை களவாடிய

கைகாட்டி மரங்களுக்கு

நித்தமும் நீர் பாய்ச்சுகின்றோம்!

வேரில்லா கொடிமரங்களுக் கீழே

தேரினை நிறுத்துகின்றோம்

புதிய பாரிகளாய்!

பெரியாரைப் போற்றுவோம்

அதற்கு முன்னால்

கொஞ்சம் பேசுவோம்!

ஆண்டுக்கு ஒருமுறை வருகின்ற

ஆகஸ்ட் 15 யைப் போலவே

அர்த்தமிழந்த செப்டம்பர் 17 !

செக்குமாடுகளுக்கு

இடமென்ன? வலமென்ன?

33 ஆண்டுகளாய்

போட்டது போட்டபடி

வைத்தது வைத்த இடத்தில்!

விலக்கப்பட்டவர்கள்—விலகிவந்தவர்கள்,

துரத்தப்பட்டவர்கள்—தூர நின்றவர்கள்,

ஒதுக்கப்பட்டவர்கள்—ஒதுங்கிக்கொண்டவர்கள்,

மொத்த குத்தகை எடுத்து

முதலாளி ஆனவர்கள்,

இப்படியாக ஆளுக்கொரு தின்னையில்……

குடியரசு, புரட்சி, பகுத்தறிவு,

விடுதலை, உண்மை, பெரியார்….

சுட்டபழம் வேண்டுமா?

சுடாதபழம் வேண்டுமா? என்று

சத்தம் போட்டு விற்பனை!

நான் பிறக்கும் முன்பே

தேவடியாள் மக்கள் நீங்கள்!

நான் பிறக்கும் முன்பே

சூத்திரர்கள் நீங்கள்!

நான் பிறக்கும் முன்பே

நாலாம் சாதி நீங்கள்!

நாளைக்கு சாகப்போகிறேன்,

உங்களை சூத்திரனாக விட்டு விட்டுத்தானே,

அப்பறம் என்ன என்னுடைய தொண்டு!

சொல்வது நானல்ல-

சொன்னவர் பெரியார்!

இது என்ன? ஆதங்கமா?

ஆத்திரமா? அறைகூவலா?

அவரின் மரனசாசணம்!

அந்த

நீடுதுயில் எழுப்பிய

நிமிர்ந்த நெஞ்சை

முள்ளோடு புதைத்தோம்!

முள்ளை எடுக்க 33 ஆண்டுகளாயிற்று,

ஆனாலும் இன்னும்

வழக்கும்,வம்பும்!

நீ,

சன்னியாசியாகக் கூட

சம்மதிக்காதச் சட்டம்

உன்னை அர்ச்சகனாக்க அவசரப்படுமா?

எனவே இன்னமும்

நாம் நாலாம் சாதி தான்!

சூத்திரர்கள் தான்!

தேவடியாள் மக்கள் தான்!

போட்டது போட்டபடி,

வைத்தது வைத்தபடி!

பெரியார் இன்னொரு

செய்தியும் சொன்னார்,

சாகப்போகும் கிழவன் சொல்கிறேன்,

எனக்குப் பின்னால் வரும்தலைமுறை

உங்களிடம் பணிவாய் பேசாது, கேட்காது! என்று

என்ன நடந்தது? நடப்பது என்ன?

இலட்சியங்கள்… லட்சங்களால்

தீர்மாணிக்கப்பட்டன?

சிலைகள் வைக்கும் அவசரத்தில்

சிந்தனைகள் புதைக்கப்பட்டன?

தலைவர்களும், தத்துவங்களும்

தவனைமுறையில் நினைக்கப்பட்டனர்?

வீரம் சோரம் போயிற்று,

புரட்சி புடவையாயிற்று,

மொழி-இனம்-நாடு என்று

சங்காரமிட்டவர்கள்

கடல் வற்றட்டும்

கருவாடு தின்னலாம் என்ற

ஒற்றைக்கால் கொக்குகளாய்!

அய்யாவழியில் அயராது உழைத்து

இதோ,

ஒரு சுபயோக சுபதின வெள்ளியில்

உலக திரையரங்குகளில்

பச்சைக்கல் மோதிரத்தோடு

சத்தியராஜ், பெரியாராய்!

பாடமாக வேண்டிய பெரியார்

செல்லுலாய்டில் படமாகிப்போனார்!

வாழ்க பெரியார்!

பெரியாரைப் போற்றுவோம்,

அதற்கு முன்னால்

கொஞ்சம் பேசுவோம்!

33 ஆண்டுகளாய்

போட்டது போட்டபடி,

வைத்தது வைத்த இடத்தில்?

ஆகவே பெரியார்

உடைபடுகிறார்- உருவம் மாற்றபடுகிறார்!

கொள்கையோடு கொஞ்சம்

கோபமேறி கூடினால்

எங்களுக்குத் தெரியாது,

அவர்கள் நாங்களில்லை!

அறிக்கை வருகிறது?

சப்புக் கொட்டி

சாப்பிடுகின்ற கூட்டத்தில்

உப்புப் போட்டு உண்ணுகிறவன் எவனும்

உன்னோடு இருக்க முடியாது?

பெரியார் உடைக்கப்பட்டாலும்,

பெரியார் உருவம் மாற்றப்பட்டாலும்,

பெரியார் ஏசப்பட்டாலும்,

பெரியார் பேசப்படுவார்,

பெரியார் தேவைப்படுவார்,

பெரியார் தேவைப்படுவார்!

ஏனெனில்

பெரியார் ஓர் சகாப்தம்!

பெரியார் தத்துவங்களின் மொத்தம்!

பெரியார் மக்கள் சமூக மருத்துவம்!

பெரியார் மொழிபெயர்த்தால் மனிதநேயம்!

ஆனாலும் இன்றைக்கு

பெரியார் தோண்டி எடுக்கப்பட

வேண்டிய கட்டாயம்!

யோசியுங்கள் நண்பர்களே,

நாம்

மரணத்திற்கு முன்பாகவேனும்

மனிதர்களாக வேண்டும்!

என்ன செய்யலாம்?

யோசியுங்கள் நண்பர்களே!

[30.12.2006ல் திருச்சி,தமிழ்ச்சங்கத்தில்,தமிழ்ப்பேரவை சார்பாக

நடைபெற்ற பெரியாரைப் போற்றுவோம் கருத்தரங்கில்

வாசிக்கப்பட்ட சிறப்புக் கவிதை]

பூக்களின் தூரிகைகள்

பூக்களின் தூரிகைகள்

பூக்களின் இதழ்களில்

தூரிகைகள்!

புலரப்போவது பூபாளமா?

புதிதாய்த் தென்றலா?

அங்கே,

முற்றும் துறந்த

முனிவர்களின் கைகளில்

கடப்பாரைகள்!

இடிபாடுகளுக்கிடையே

ஒலிப்பது

இந்துத்துவத்தின் முழக்கமல்ல,

கரசேவர்களின் காலடியில்

நசுங்கிய மனித ஓலங்கள்!

இங்கே இந்தப்

பிஞ்சுவிரல் மலர்களில்

ஓவியத் தூரிகைகள்!

புலரப்போவது பூபாளமா?

புதிதாய்த் தென்றலா?

குழலையும் யாழையும் விட

மழலை இனிமைதான்!

அதையும்விட , அது

அழித்து அழித்துக் கிறுக்கும்

அனா,ஆவன்னா

அத்தனையும் தித்திப்பு!

அந்த நந்தவனங்கள்

அயோத்தியில் இருந்தாலும்

அய்யம்பேட்டையில் இருந்தாலும்

அவர்களுக்கு தெரிந்தது

ராமனும் பாபரும்

வெறும் பெயர்கள்தான் என்று!

ஓ,,, அம்மாக்களே,அப்பாக்களே

அவர்களை அப்படியே விடுங்கள்

எல்லோரையும், யாவற்றையும்

அவர்களாகவே , அவர்கள்

அறிமுகப்படுத்திக் கொள்ளட்டும்!!

[12.11.1992ல் குடந்தையில், ஓவியக்கண்காட்சியில்

சிறுவர்கள் வரைந்தபோது பக்கத்திலிருந்து எழுதியது]

——————————————————————-

Hello world!

Welcome to WordPress.com. This is your first post. Edit or delete it and start blogging!